மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் டோயா கார்டிங்லே (24). இவர் கடந்த 2018-ம் ஆண்டில் வாங்கெட்டி கடற்கரைக்கு தனது நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றார். அவரை இந்தியாவைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் (38) என்பவர் கொலை செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஆஸ்திரேலியாவின் இன்னிஸ்பெயில் நகரில் நர்ஸாக பணியாற்றினார்.
இவர் டோயாவை கொலை செய்துவிட்டு, 2 நாளில் இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். இவர் தனது மனைவி, 3 குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். அவர்களையும் ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு, ராஜ்விந்தர் சிங் மட்டும் இந்தியா தப்பினார்.
இவரை கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் போலீஸார் தீவிர முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இவரை பற்றி யாராவது துப்பு கொடுத்தால், அவருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 20 லட்சம்) வெகுமதி அளிக்கப்படும் என குயின்ஸ்லேண்ட் காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குயின்ஸ்லேண்ட் காவல்துறை வரலாற்றில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெகுமதி ஆகும். இந்தகொலை வழக்கு குறித்து தகவல் திரட்டுவதற்காக ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் தனி புலனாய்வு மையம் அமைக்கப்பட்டு அதில் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.