குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் சாத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்து தற்போது பார்ப்போம்.
1. குஜராத்தின் கடலோரா சவுராஷ்ட்ராவில் உள்ள துவாரகா மாவட்டத்தின் பிப்லியா என்ற கிராமத்தில் 1982, ஜனவரி 10-ல் பிறந்தவர். இவரது தந்தை கெராஜ்பாய் காத்வி ஒரு விவசாயி.
2. குஜராத் வித்யாபீடத்தில் கடந்த 2005-ம் ஆண்டு இதழியல் பட்டம் முடித்தார். இதையடுத்து, ஊடகங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
3. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யோஜனா என்ற நிகழ்ச்சி தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியவர். அதன் பிறகு இடிவி குஜராத்தி-யில் இணைந்தார். அப்போது, குஜராத்தின் டாங் மற்றும் கப்ரதா பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததை வெளிக்கொண்டு வந்தார். இதையடுத்து, இது குறித்த விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வந்தார்.
4. கடந்த 2015ல் VTV குஜராத்தி தொலைக்காட்சியின் ஆசிரியராக தனது 32-வது வயதில் பணியில் சேர்ந்தார். அதில், இவர் நடத்திய மகாமந்தன் என்ற நிகழ்ச்சி பெரு வெற்றி பெற்றது.
5. கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தனது தொலைக்காட்சிப் பணியை ராஜினாமா செய்தார் இசுதான் காத்வி. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இவரை அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. இவர், 2021, ஜூலை 14ம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
6. ஆம் ஆத்மி கட்சியில் தேசிய இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். குஜராத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில், ‘போதும், தற்போது நமக்குத் தேவை மாற்றம்’ என்ற பெயரில் யாத்திரையை துவாரகாவில் தொடங்கி நடத்தி வருகிறார். வரும் 20-ம் தேதி இந்த யாத்திரை நிறைவடைய இருக்கிறது. இந்த யாத்திரையின் மூலம் 67 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
7. ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த வசதியான குடும்பப் பின்னணி கொண்டவர்.
8. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் இவரோடு, கட்சியின் மாநில தலைவர் கோபால் இடாலியா, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில் 73 சதவித வாக்குகளைப் பெற்று குஜராத்தின் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் சாத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
9. 2021, டிசம்பர் 20ம் தேதி காந்தி நகரில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இசுதான் சாத்வி கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மது குடித்து இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.