தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று போட்டியில் 33 ஓட்டங்களால் டக்வர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
சிட்னியில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி குழு 2 இல் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் அணி தனது கடைசி சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (06) பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் விளையாடவிருப்பதால் அந்த அணிகள் வெற்றியீட்டினால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது.
இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென்னாபிரிக்க அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அந்த அணிகள் தனது கடைசி போட்டியில் முறையே சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளன.
இதேவேளை நேற்று (03) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் 186 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆரம்பமான போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு மேலும் ஐந்து ஓவர்களுக்கு 73 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த அணியால் 38 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 33 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.
இதேவேளை ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைவதை தீர்மானிக்கும் சுப்பர் 12 சுற்றின் இரு குழு 1 போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
அடிலைட்டில் நடைபெறும் போட்டிகளில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்ள இருப்பதோடு அவுஸ்திரேலிய அணி ஆப்கானுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் ஆப்கான் மற்றும் அயர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இந்த இரு அணிகளில் ஒன்றின் வெற்றி இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க உதவியாக அமையும்.
இலங்கை அணி குழு ஒன்று புள்ளிப் பட்டியலில் தற்போது நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று நான்கு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தலா ஐந்து புள்ளிகளுடன் உள்ளன.
இதன்படி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை அதிகரிப்பதற்கு இன்றைய போட்டியில் வெல்வது கட்டாயமாகும். இதில் ஒரு அணி இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இலங்கை அணி நாளை (05) நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டினால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
ஆனால் இன்றைய தினத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் வெற்றியீட்டினால் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.