புதுடெல்லி: தெலங்கானா, பிஹார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
தெலங்கானாவின் முனுகோடு, பிஹாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஹரியாணாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் தலா ஒரு தொகுதியும் இருந்தன. இத்தொகுதிகளில் பாஜக மற்றும் மாநில கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
பிஹார் இடைத்தேர்தலில் பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையேயும், ஹரியாணாவில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையேயும், தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாஜக மற்றும் மாநில கட்சிகளான தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாதி மற்றும் பிஜூ ஜனதா தளம் இடையே போட்டி நிலவுகிறது.
தெலங்கானா இடைத்தேர்தலில் மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அங்கு 59.92% வாக்குகள் பதிவாகியிருந்தது. இங்கு ஒரு சில இடங்களில் பாஜக மற்றும் டிஆர்எஸ் தொண்டர்கள் இடையே மோதல் நடந்தது. அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியில் நேற்று மாலை 6 மணி வரை 31.74% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. மற்ற தொகுதிகளில் நேற்று மாலை 3 மணி வரை 45% முதல் 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.