ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையத்தில் கடந்த 1986ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துக்காக 5.45 ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய் அலுவலகம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. அந்நிலத்தின் உரிமையாளர்களான நடராஜன், குப்புவிஜயலட்சுமி, தட்சணாமூர்த்தி, அனிதா, தினேஷ்மூர்த்தி, மணிமேகலை, லட்சுமிநாராயணன், சிந்து ஆகிய 8 பேருக்கு நிலத்துக்கு குறைவான மதிப்பீட்டை மாவட்ட வருவாய் துறை நிர்ணயித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் சதுரடிக்கு 5 ரூபாய் என ரூ.51 லட்சம் செலுத்த கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனாலும், வீட்டுவசதி வாரியம் உரிய இழப்பீடு தொகை வழங்காமல் இருந்து வந்தது. இதையடுத்து, இழப்பீடு தொகை ரூ.51 லட்சத்திற்கு வட்டி, வட்டிக்கு வட்டி, அனுதாபத்தொகை என சேர்த்து மொத்தம் ரூ.78 லட்சத்து, 23 ஆயிரத்து 635 செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமலாக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் அமீனா நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோர்ட் ஜப்தி உத்தரவை வழங்கினர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து வருகின்ற வரும் 8ம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால் கோர்ட் ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கினர்.