சென்னை: மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சென்னை மாநகராட்சி உடனடியாக சீரமைக்க வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர்த்து பல்வேறு சேவை துறைகளின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாக சேதம் அடைந்த சாலைகளில், ‘பேட்ஜ் வொர்க்’ என்ற தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதன்படி மாநகராட்சி சார்பில், வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜல்லி, மணல், தார் கலவை உள்ளிட்டவை தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கி, அக்., 31ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால், மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் பள்ளம், மேடாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக, தி.நகர் திருமலை சாலை, அண்ணா நகர் சாந்தி காலனி 13வது பிரதான சாலை, தண்டையார் பேட்டை டிஎச் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகில் உள்ள வாலை மற்றும் உட்புற சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைகளின் சாலைகள் பள்ளம், மேடுகளாக காட்சியளிக்கின்றன.
மழைநேரத்தில் பள்ளங்களில் நீர் நிரம்பி விடுவதால், பள்ளங்கள் இருப்பதை அறியாமல் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், மழைநீர், பாதாள சாக்கடை மேன்ஹொல் பல இடங்களில் உடைந்த நிலையில் உள்ளன. எனவே தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் தமிழக அரசும், மாநகராட்சியும், மழைக்கால விபத்துகளை தவிர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.