தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான சங்கர், அடுத்தாக வரலாற்று புனைவு நாவலை அடிப்படையாக கொண்டு பிரம்மாண்ட பீரியட் படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், அந்த நாவலை 3 பகுதிகளாக எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படத்தை உருவாக்க இருக்கும் இயக்குநர் சங்கர், கைவசம் இருக்கும் இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 படங்களை முடித்தவுடன் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக சூர்யா மற்றும் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார் சங்கர். அதாவது, சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலை தான் படமாக்க சூர்யாவும், சங்கரும் முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது இரண்டு படங்களில் பிஸியாக சங்கர் இருப்பதால், அந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன், மொத்தமாக வேள்பாரி நாவலை திரைக்கதையாக்க வடிவமைக்க இருக்கிறார். சூர்யாவும் கைவசம் இருக்கும் படங்களை வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார். அந்த படங்கள் அனைத்தையும் முடித்தவுடன், முழுமையாக வேள்பாரி நாவலின் படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இயக்குநர் சங்கரை பொறுத்தவரையில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை எடுப்பதில் வல்லவர் என்றாலும், அவர் இயக்கும் படங்கள் அண்மைக்காலமாக தோல்வியை சந்தித்து வருகின்றன. தொடர் தோல்வி, வசூலில் பின்னடைவு ஆகியவை சங்கருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ராஜமௌலி உள்ளிட்டோர் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை குறைந்த பொருட் செலவில் உருவாக்கி, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக சங்கர் இருந்தாலும், அவர் இயக்கிய பிரம்மாண்ட படங்கள் வசூலில், பாகுபலி போன்ற படங்கள் செய்த சாதனையை இதுவரை செய்ததில்லை.
அதனால், இந்த முறை அவரது இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஆர்சி 15 மற்றும் இந்தியன் 2 படங்கள், இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். வேள்பாரி படத்தை உலகமே திரும்பி பார்க்க வேண்டும் என்பதும் அவருடைய இப்போதைய கனவாக இருக்கிறது. அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டை தீர்மானிதிருக்கிறார் சங்கர். இந்திய சினிமாவையே ஆட்டிப் படைத்த பாகுபலி படத்தின் மொத்த வசூலையும், பீரியட் படத்துக்காக சங்கர் செலவு செய்ய இருப்பதாக உலவும் தகவல் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.