பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒரு அதிரவைக்கும் இனவெறுப்புச் சம்பவம்: அவையில் கூச்சல் குழப்பம்…



பிரான்ஸ் நாடாளுமன்றத்தை அதிரவைக்கும் ஒரு இனவெறுப்புச் சம்பவம் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

புலம்பெயர்தல் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பிய கருப்பின நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி மற்றொருவர் கூறிய வார்த்தைகளால் அவையில் கூச்சலும் குழப்பமும் உருவானது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Carlos Martens Bilongo கருப்பினத்தவர். அவர் மத்தியதரைக்கடலில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் நிற்கும் படகு ஒன்றை மீட்பது குறித்து பிரச்சினை ஒன்றைக் கொண்டுவந்தார்.

அப்போது, ’ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போ’ என்னும் ஒரு குரல் அவையில் ஒலித்தது. அதைக் கூறியவர் வலது சாரிக் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினரான Gregoire de Fournas.

அவர் ’ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போ’ என சத்தமிட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் உருவானது.

Carlos கருப்பினத்தவர் என்பதாலேயே அவர் இனரீதியாக அவமதிக்கப்பட்டதாக அவையில் கடும் கண்டனம் எழுந்தது.

Carlosம், நான் பிரான்சில் பிறந்தவன், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர், இன்று நான் எனது தோலின் நிறம் காரணமாக அவமதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

இதற்கிடையில், தான் கடலில் நிற்கும் படகிலிருக்கும் அந்த புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்றுதான் கூறியதாகவும், தனது கூற்று தவறாக திரித்து பெரிதுபடுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறிய Gregoire, தனது கருத்தால் உருவான தவறான புரிதலுக்காக தான் Carlosஇடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

இருந்தாலும், பிரான்ஸ் பிரதமர் Elisabeth Borne, Gregoire மீது அவை தடை விதிக்கவேண்டும் என்றும், நமது ஜனநாயக நாட்டில் இனவெறுப்புக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், Gregoireக்கு கடுமையான அபராதம் விதிக்கவேண்டும் என்றும், அவரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.