புதுடில்லி,
வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பொதுவான கல்விக் கொள்கை வகுக்க கோரி கொரோனா தொற்று காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போது பயனற்றதாகி விட்டதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொரோனா பெருந்தொற்று பரவத்துவங்கியபோது, வெளி மாநில தொழிலாளர்கள் வேலையின்றி கடும் அவதிக்கு ஆளாகினர். வருமானம் இன்றி, தங்குவதற்கு இடமும் இன்றி அவர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பொதுவான கல்விக் கொள்கை வகுக்கக்கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் அது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க, 2020 ஆகஸ்டில் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கொரோனா காலத்தில், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் பெரும் அளவில் குறைந்துவிட்டது. எனவே இந்த மனு பயனற்றதாகி விட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement