முச்சக்கர வண்டியில் கொழும்பு முழுவதையும் சுற்றிப் பார்ப்பதற்கு நியூசிலாந்து பிரஜை ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை (1,50,000) பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு (1ம் திகதி) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் செய்த முறைப்பாடொன்று (1 ஆம் திகதி) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
2020 இல் இலங்கைக்கு வந்த நியூசிலாந்து பிரஜை, சுற்றுலா வழிகாட்டியின் உதவியுடன் கொழும்பின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைப் பார்வையிட விரும்பியுள்ளார். இதற்காக வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் செல்ல தீர்மானித்துள்ளனர். பின்னர் சுற்றுலா வழிகாட்டி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.
அதற்கான கட்டணம் எவ்வளவு என்று முச்சக்கரவண்டி சாரதியிடம் நியூசிலாந்து பிரஜை கேட்டுள்ளார். முச்சக்கரவண்டி சாரதி தனது கட்டணம் 20 டொலர் என்றும், அது ரூபாயில் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது நியூசிலாந்து நாட்டவர் இந்த நாட்டில் ஒரு டொலர் எவ்வளவு என்று கேட்டதற்கு முச்சக்கர வண்டி சாரதி ஒரு டொலர் 4500 ரூபா என பதிலளித்துள்ளாரர்.
அதன்படி ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 1,50,000 ரூபாவை எடுத்துக்கொண்ட நியூசிலாந்து பிரஜை, கொழும்பில் உள்ள இடங்களை சுற்றிக் காட்டுமாறு கூறி முச்சக்கரவண்டி சாரதியிடம் பணத்தை கொடுத்துள்ளார். பயணத்தின் போது, சுற்றுலா வழிகாட்டி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் தன்னை ஏமாற்றுவதாக நியூசிலாந்து பிரஜை உணர்ந்துள்ளார். அத்துடன், குறித்த நியூசிலாந்து பிரஜை சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்து விட்டு தனது நாடு திரும்பியுள்ளார். முறைப்பாடு செய்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுற்றுலா வழிகாட்டி மேலும் ஒரு குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேகநபர், நியூசிலாந்து பிரஜையை ஏமாற்றி 1,50,000 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு (1ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.