சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்ற `அப்பா லாக்’ (App(a) Lock) என்ற குறும்படத்தை மையமாக வைத்து, `கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் `லவ் டுடே’ (Love Today).
பிரதீப், இவனாவின் காதல், இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. இக்காதலை மறுக்கவோ, ஏற்கவோ செய்யாத சத்யராஜ், இருவரும் தங்களின் மொபைலை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விவகாரமானதொரு கண்டிஷனை முன்வைக்கிறார். 24 மணி நேரத்திற்குப் பின்னும் அவர்களின் காதல் தொடர்ந்தால், அவரே அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த கண்டிஷனைக் கடந்து இந்த ஜோடியின் காதல் கைகூடியதா, இருவரின் மொபைல்களிலும் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன, அதனால் உண்டாகும் சிக்கல்கள் என்னென்ன என்பதை இந்தக் காலத்துக் காதல் கதையாகச் சொல்லியிருக்கிறது ‘லவ் டுடே’.

வெற்றிபெற்ற குறும்படங்கள் திரைப்படங்களாகும்போது ஏற்படும் ‘பாரம்பரிய’ சறுக்கல்கள் இதில் தொடராத வகையில், ரகளையான காட்சியமைப்புகளுடன் தொய்வில்லாத திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப். பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும், 2k மற்றும் 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் வாழ்வின் பிரதிபலிப்பாக, அவர்கள் காதலை அணுகும் விதத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருப்பது சிறப்பு.
இப்படத்தை பிரதீப்பே எழுதியிருப்பதால், ‘உத்தமன் பிரதீப்’ என்ற ஹீரோ கதாபாத்திரத்தின் உடல்மொழியை, தனக்கு ஏற்றதுபோலவே உருவாக்கியிருக்கிறார். உத்தமனாக வரும் பிரதீப்பின் நடிப்பு எந்த இடத்திலும் அந்நியமாகவோ, அயர்ச்சியாகவோ இல்லை. அதேநேரம், பல இடங்களில் நடிகர் தனுஷின் உடல்மொழி எட்டிப்பார்ப்பது நெருடல். சிரிப்பு, கையசைவு, முகபாவங்கள் என அனைத்திலும் தனுஷே நம் கண் முன் வந்து போகிறார். இதைத் தவிர்த்திருக்கலாமே பிரதீப்? கதாநாயகி நிகிதாவாக வரும் இவானாவும் தன் பங்கிற்கு, பிரதீப்போடு மல்யுத்தம் செய்கிறார். காதல் சண்டையிலும் சரி, நடிப்பிலும் சரி!
பிரதீப்பின் அம்மாவாக ராதிகாவும், நிகிதாவின் அப்பாவாக சத்யராஜும் கச்சிதமான தேர்வு. இந்த ரகளையான டி20 மேட்சில், இரண்டு பேருமே தங்களுக்கு கிடைத்த சொற்ப பந்துகளை, ஃப்ரீ ஹிட்டாக மாற்றி சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள். ராதிகா இறுதியில் தன் மகனுடன் பேசும் அந்த எமோஷனல் காட்சியும், சத்யராஜ் பிரதீப்பை தன் வீட்டில் முதன்முதலாக டீல் செய்யும் காட்சியும் அதற்கான உதாரணங்கள்.
தன் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்திலும் யோகி பாபுவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை பிரதீப் வழங்கியிருக்கிறார். முகச்சுளிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவைகள், உருவக்கேலிகள் என இத்தனை நாள்களாக ரசிகர்களைப் பாடாய்ப்படுத்தி எடுத்துக்கொண்டிருந்த யோகி பாபுவை, சந்திரமுகி மோடில் இருந்து கங்கா மோடுக்கு மாற்றி, உருவக்கேலிகளுக்கு எதிராக பேச வைத்ததற்காக இயக்குநருக்கு ஒரு அப்ளாஸ்.
பிரதீப்பின் அக்காவாக நடித்திருக்கும் ரவீனா ரவி, நண்பர்களாக வரும் ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் என அத்தனை துணை கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ‘வெந்து தணிந்தது காடு, 29908வது தடவையாகக் கம்பேக் கொடுக்கும் யுவனுக்கு ஒரு வணக்கத்தைப் போடு’ எனக் குதூகலமாக தியேட்டருக்குள் நுழைந்த யுவன் ரசிகர்களுக்கு, ஒரு சிட்டிகை துக்கத்தைக் கொடுத்தாலும், ஆங்காங்கே பின்னணியில் ஒலிக்கும் யுவனின் குரல் அந்தப் பழைய மேஜிக்கை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றிருக்கிறது.

சில நேரடி ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்; சில காட்சிகளில் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே சொல்கிறேன் என வைக்கப்பட்டிருக்கும் சில ஷாட்டுகளைத் தவிர்த்து, கொஞ்சம் மெனக்கெட்டு பொறுப்புணர்வோடு திரைமொழியில் அதைக் காட்சிப்படுத்தியிருக்கலாம் என ஆங்காங்கே சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பாய் பெஸ்ட்டி, ஆபாசக் குற்றங்கள் போன்றவற்றை சில இடங்களில் இன்னமும் தெளிவான புரிதலுடன் அணுகியிருக்கலாம். அதே சமயம், முதல் பாதியில் பெண்கள் செய்யும் தவறுகள், இரண்டாம் பாதியில் ஆண்கள் செய்யும் தவறுகள் எனத் தொகுதி பிரித்து கபடி ஆடியிருக்கிறது திரைக்கதை. காதல் உறவில் இருவரிடமும் இருக்கும் சிக்கல்கள், சந்தேகப் பிரச்னை, உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எனப் பல சீரியஸான விஷயங்களை காமெடியாக, ரசிக்கும்படி அணுகியிருக்கிறது படம்.

மொத்தத்தில் காதலன், காதலி மட்டுமல்ல, காதலும் எல்லா காலகட்டத்திலும் தனக்கான உருவங்களை, குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளும். ஆனால், காதல் என்றும் காதல்தான் என்று சொல்லி, சந்தேகத்தைக் கடந்து பரஸ்பர நம்பிக்கைக் கொள்ளும் உறவு அவசியமானது என்கிறது இந்தக் கால காதல் படமான இந்த `லவ் டுடே’.