கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானையின் பாகன், செல்போனை அதிக நேரமாக பார்த்து கொண்டிருக்க பாகன் தன்னை கவனிக்கவில்லை என்று யானை மங்களம் குழந்தை போல் அடம் பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு, கடந்த 1982ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார், மங்களம் என்ற யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் யானை மங்களம், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பாசத்துடன் ஆசி வழங்குவதும், பழங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடுவதுமாக இருப்பதால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மங்களத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.
இந்நிலையில், யானை மங்களத்தை கவனித்து வரும் பாகன் அசோக்குமார் என்பவர், யானையின் அருகே கீழே உட்கார்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பாகன் செல்போனில் அதிக நேரமாக பார்த்து கொண்டிருக்க, பாகன் தன்னை கவனிக்கவில்லை என்று கோயில் யானை குழந்தை போல் அடம் பிடித்துள்ளது. இதில் தானும் செல்போனை பார்ப்பேன் என்று கூறுவது போல் இந்த யானையின் செயல் அமைந்துள்ளது. இதைப்பார்த்த வியந்த பக்தர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலானதால் இதை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.