ஆமதாபாத் :குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக, பிரபல ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளரான இசுதான் கத்வி, 40, அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுடன், ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
கருத்து கேட்பு
இந்நிலையில், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் முடிவு செய்யப் போவதாக ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, ‘வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்., இ – மெயில்’ ஆகியவற்றின் வாயிலாக கருத்து கேட்கப்பட்டது.
கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
பொதுமக்கள் தெரிவித்த கருத்து அடிப்படையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக, முன்னாள் ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளரான இசுதான் கத்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு, 73 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், இசுதான் கத்வி முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.பஞ்சாபிலும் சட்டசபை தேர்தலுக்கு முன் இப்படி பொதுமக்களிடம் கருத்து கேட்டுத் தான், பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.
அவர் தான் இப்போது பஞ்சாப் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் டிவி சேனலில் ஒளிபரப்பான அரசியல் விவாதம் தொடர்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இசுதான் கத்வி.
திடீர் திருப்பம்
அரசியல் கட்சியினரை நோக்கி இவர் எழுப்பிய கேள்விகள், குஜராத் மக்களிடையே இவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தின. இதையடுத்து வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
இவருக்கு, தேசிய இணை பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, இவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பதிந்தார் சமூகத்தினரின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கோபால் இடாலியா, ஆம் ஆத்மியின் குஜராத் மாநில தலைவராக உள்ளார்.
இவர் தான், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது. திடீர் திருப்பமாக இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், விவசாய குடும்பத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இதன் அடிப்படையிலேயே இவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக, குஜராத் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்