பெண்களுக்கு மாதம் ரூ.1,500: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல்,
காங்கிரஸ்
, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருவதால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அந்த தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மாதந்திர உதவித்தொகை, 300 யூனிட்கள் இலவச மின்சாரம், பழைய ஓய்வுதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் எனவும், இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்க ரூ.680 கோடி ஸ்டார்ட்அப் நிதி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நாங்கள் அளித்திருப்பது வெறும் வாக்குறுதிகள் மட்டும் இல்லை. இமாச்சலப் பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆவணம். காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும்.” என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் தானி ராம் சண்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.