கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த ஏழு நாட்களாகவே தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததாக வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மழை காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் சார்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் லோகோவை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், “மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடக்கும்” என்று தெரிவித்தார்.