‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ளத் திரைப்படம் ‘லவ் டுடே’. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமகால காதல் திரைப்படமான இப்படம் நவம்பர் 4-ம்தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரவீனா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
It’s always a pleasure to showcase talents like you @raveena116 https://t.co/uWvzkdg5AO
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 5, 2022
இது பற்றிப் பதிவிட்டுள்ள அவர், “‘லவ் டுடே’ திரைப்படம் வெற்றியடைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கு எனது நன்றிகள். இத்திரைப்படத்தை எல்லோரும் தங்கள் கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டாடுகிறார்கள். அதேசமயம் சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள், அது மிகவும் முக்கியமான ஒன்று. இவை அனைத்தும் சேர்ந்து வருவது அரிது, வாழ்த்துகள். யோகி பாபு சாருக்கு நன்றி. சீரியஸ் காட்சிகளிலும் கூட ‘ஆக்ஷன்’ என்று சொன்னவுடன் என்னைச் சிரிக்க வைத்தீர்கள். இதனால் படப்பிடிப்பின் போது நான் ரீடேக்ஸ் வாங்கினேன். படக்குழு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ள படத்தின் இயக்குநர் பிரதீப், “உங்களைப் போன்ற திறமைசாலிக்கு வாய்ப்பளித்ததில் எனக்குத்தான் மகிழ்ச்சி” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.