ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு பாஜ கட்சி பணியை செய்யட்டும்: கோபியில் முத்தரசன் பேட்டி

கோபி: ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு பாஜ கட்சி பணியை செய்யட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்  முத்தரசன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலக கட்டுமான பணியை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மதம், ஜாதி, மொழி பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை பா.ஜ நிறைவேற்ற பார்க்கிறது. அதில் அவர்களால் வெற்றி பெற முடியாது.

பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி அரசுகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இங்குள்ள ஆளுநர்  ரவி போன்றவர்கள் அவருடைய வேலையை செய்யாமல் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை கையாளுகிறார், பேசுகிறார். அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், மதசார்பின்மைக்கு எதிராகவும் சனாதனத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் திருந்தாத நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு குடியரசு தலைவரிடம் கொடுத்து இவரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்.

ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு பாஜ கட்சி பணியை செய்யட்டும். ஆளுநராக இருந்து கொண்டு பாஜவிற்கு ஊது குழலாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நடவடிக்கையானது அதிகாரிகளோடு நின்று விடாமல் இதில் முதன்மை குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமியை சேர்க்க வேண்டும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை பொருத்தவரை அவர் மோடி, அமித்ஷா தூண்டுதல் பேரில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாக்கி, திமுக அரசை பணிய வைக்கிற முயற்சியை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.