பாலக்காடு : கேரளாவில், வளர்ப்பு நாய்க்கு உணவு வைக்க தாமதம் செய்ததற்காக, தன் உறவினரை அடித்தே கொன்ற ௨௭ வயது இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாலக்காட்டில் வசிக்கும் ஹக்கீம், ௨௭, வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு துணையாக, இவரது உறவினர் அர்ஷத், ௨௧, கூட இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஹக்கீமின் வளர்ப்பு நாய்க்கு, அர்ஷத் தாமதமாக உணவு வைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஹக்கீம், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அர்ஷத் உயிரிழந்தார்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
ஹக்கீம், அர்ஷத்தை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே அர்ஷத் இறந்துவிட்டார்.
இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, போலீசார் ஹக்கீமிடம் விசாரித்தனர்.
அப்போது, அர்ஷத்தை கம்பு மற்றும் நாயை கட்டும் பெல்ட்டால் ஹக்கீம் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், மருத்துவமனையில், அர்ஷத் மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ஹக்கீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement