என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

'பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று' வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மணிரத்தினம் பேசுகையில், ''எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சுபாஸ்கரனை சந்தித்து, 'பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்' என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது.

அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது.
சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.