கும்பகோணத்தில் பாகனுடன் கொஞ்சிக் குலாவும் மங்களம் யானை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு 1982-ல் காஞ்சி மகா பெரியவர், மங்களம் யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் மங்களத்தை, பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார். இந்த யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை வாங்கிக் கொள்ளும்.

மேலும், இந்த யானை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலையில் மங்களாம்பிகை அம்மன் முன் மண்டியிட்டு வணங்குவது சிறப்பாகும். இந்தக் காட்சியை பார்ப்பதற்காகவே அன்று பக்தர்கள் அதிகளவில் வருவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் யானைப் பாகன் அசோக்குமார், யானைக்கு அருகில்அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தன்னை கவனிக்காமல் செல்போனை நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்ததால், அவர் செல்போனில் என்ன பார்க்கிறார் என்பதை யானை மங்களம் குனிந்து பார்த்து, குரல் எழுப்பி அவருடன் கொஞ்சி விளையாண்டது. அப்போது, அங்கிருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து யானைப் பாகன் அசோக் குமார்(50) கூறியது: நான் பள்ளிக்குச் செல்லும்போது இருந்தே இந்த யானையுடன் பழகி வந்தேன். பல நாட்கள் பள்ளிக்குக் கூட செல்லாமல் யானையை நீராட வைப்பது, அலங்காரம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தேன். இதனால், யானையும் என்னுடன் பாசமாக பழகத் தொடங்கியது.

நான் கோயிலுக்குள் நுழையும்போது என்னைப் பார்த்து மெல்லிய குரலில் பிளிறும். அருகில் சென்றவுடன், நான் அதற்கு முத்தம் கொடுத்து, மலையாளத்தில், ‘அம்மு, எப்படி இருக்கிறாய், நலமா? சாப்பிட்டாயா?’ எனக் கேட்டவுடன், என் அருகில் குனிந்து மெல்லிய பிளிறலுடன் பதில் கூறும். பின்னர், நடனமாடி தனது சந்தோஷத்தை வெளிக்காட்டும்.

மேலும், என்னை தனது கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு கொஞ்சும். அப்போது நான் அதன் கால்களைத் தடவிவிட்டால்தான், அந்த இடத்தை விட்டு நகரும். நான் வெளியூர் செல்வதாக இருந்தால், மங்களத்திடம் தகவல் கூறிவிட்டுத்தான் செல்வேன். ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பிவரும்போது, என்னை உச்சிமுகர்ந்து, பாசத்தை வெளிக்காட்டும்.

யானைக்கு மஞ்சள் தூள், மிளகு, சீரகம், நெய், பனை வெல்லம் கலந்த 8 கிலோ எடையுள்ள சாதம், 250 கிலோ எடையுள்ள ஆல, அரசு, அத்தி இலைகள், சோளத்தட்டை, தென்னை மட்டைகள் போன்ற இயற்கை உணவுகள் தினமும் 2 வேளைகள் வழங்கப்படுகிறது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.