தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்ட மணி. இவர் சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து, அவர் வனப்பகுதியின் நடுவில் அமைந்த சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி, இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்ட மணியையும் கடித்து குதறியது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி விட முயன்ற நிலையில், அவர்களையும் அந்த கரடி கடித்து குதறியது.
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்பொழுது வனத்துறையினர் அந்த கரடியை மயக்க மருந்து செலுத்திப் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.