நவ. 11 பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு: கண்காணிப்பு வளையத்தில் காந்திகிராம பல்கலைக்கழகம்

நிலக்கோட்டை:  திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வரும் 11ம் தேதி 36வது முதுநிலை ஆராய்ச்சி மாணவர் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு வருந்தினராக கலந்துகொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் வருவதை முன்னிட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் திண்டுக்கல் – தேனி சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட கலெக்டர் விசாகன், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு செய்து வந்தனர்.

பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பிரதமர் மோடி, மதுரை விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் வந்து இறங்கி விழா அரங்கம் செல்லும் பகுதிகள் மற்றும் விழா நடைபெறும் பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கம், காந்திகிராம சுகாதாரம் குடும்ப நல அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ஹெலிபேடு ஆகிய பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரங்கிற்கு வரும் மாணவர்கள், பார்வையாளர்களுக்கான வழித்தடம், ரயில்வே சுரங்கப்பாதை வழித்தடங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.