திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு டிக்கெட் மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாஸ் காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிந்தராஜ் சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் வழங்கப்படுகிறது. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம். ஆனால் இந்த தகவல் அறியாத பக்தர்கள் திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
சனி, ஞாயிறான நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு முதல் திருமலைக்கு வந்ததால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் 31 அறைகளும் நிரம்பி எஸ்எஸ்டி பகுதி வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 38 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களும் ஒன்றரை மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திருமலைக்கு வரும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்கும் வகையில் நேர ஒதுக்கீடு திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் ஒன்றரை மணிநேரத்தில் தரிசிக்கின்றனர். ஆனால் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெறாமல் பலர் திருமலைக்கு வந்துவிடுவதால் அவர்கள் பல மணிநேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நள்ளிரவு முதல் விடியவிடிய நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் திருமலைக்கு வருவதால் அதற்குள் அந்த டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிடுகிறது. இதனால் அவர்கள் சர்வ தரிசன வரிசைக்கு வந்துவிடுகின்றனர். அதற்கு பதில் நள்ளிரவு 12 மணி முதல் டிக்கெட் பெற்றால் ஒன்றரை மணி நேரத்தில் தரிசித்து விடலாம். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றால் யாருக்கும் எந்த சிரமமும் இருக்காது. இவ்வாறு கூறினார்.