சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேச பேரவைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் தானி ராம் சண்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த பேரவைத் தேர்தலின்போது இமாச்சல பிரதேச மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். 5 ஆண்டுகள் கழித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை நினைத்து மக்கள் வருத்தப்படுகின்றனர்.
மக்களின் வாழ்க்கையை பாஜக சிரமத்துக்கு உள்ளாக்கி உள்ளது. நாங்கள் அளித்திருப்பது வெறும் வாக்குறுதிகள் மட்டும் இல்லை. மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆவணமாகும். காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும்.
நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டு ஒருலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மேலும், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, 300 யூனிட்கள் இலவச மின்சாரம் தரப்படும்.
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.680 கோடி ஸ்டார்ட்-அப் நிதி உருவாக்கப்படும். ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 4 ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். மேலும், மாட்டு சாணம் கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.