ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஒத்திவைப்பு! – 'அந்த 11 நிபந்தனைகள்' என்னென்ன?!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது. அப்போது அணிவகுப்புக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. 

இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் 50 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முன்னதாக ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி ஊர்வலம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டது. 

சென்னை உயர் நீதிமன்றம்

பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சட்டம் – ஒழுங்கு பிரச்னை மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய ஆறு இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். இது தவிர ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட மூன்று இடங்கள் உட்பட 44 இடங்களில் அணிவகுப்பைஅமைதியான முறையில் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். 

அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்களை விளையாட்டு மைதானங்கள் அல்லது கூட்ட அரங்குகளில்தான் நடத்த வேண்டும். இந்தக் கூட்டத்துக்குச் செல்வோர் சொந்த வாகனங்களில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். பிற மதம், சாதி குறித்து எந்த ஒரு வெறுப்பு கோஷங்களை எழுப்பவோ, பாடல்களைப் பாடவோ கூடாது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பேசக் கூடாது. 

தமிழக காவல் துறை

இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும்  எதிராகச்  செயல்படக் கூடாது. இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஓர் இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. லத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டுவரக் கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.  போக்குவரத்தைச் சரிசெய்ய போலீஸாருக்கு உதவும்விதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். 

கூம்பு வடிவ ஒலி பெருக்கியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அணிவகுப்பின்போது, மதம், மொழி கலாசாரம் ஆகியவற்றுக்கு  எதிராக எந்த ஒரு செயலையும் செய்யக் கூடாது. ஏதாவது அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தால், அதனால் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டால், அவர்கள்மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று கூறப்பட்டிருந்தது. 

ஆர்.எஸ்.எஸ்

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தென் மண்டலத் தலைவர்  வன்னியராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6-ம் தேதி நடக்கவிருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டிருக்கிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.