இன்று சந்திர கிரகணம் திருப்பதி கோயிலில் கருட சேவை ரத்து

திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயிலில் இன்று கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சந்திர கிரகணத்தையொட்டி, இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனவே, அனைத்து தரிசனங்கள், சேவைகள் மற்றும் பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பிறகு கோயிலில் தோஷ நிவாரணம் பூஜைகளுக்கு பிறகு சர்வ தரிசனம் (இலவச டோக்கன் இல்லாத) பக்தர்கள் மட்டும் இரவு 7.30 மணிக்கு பிறகு தரிசனத்திற்காக வைகுண்டம் காம்பளக்சில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

மே மாதத்திற்குள் கும்பாபிஷேகம்: இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சென்னை, ஜம்மு, ரம்பசோடவரம், சீதம்பேட்டா உள்ளிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை  நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.