ஐநாவின் 27வது பருவநிலை மாற்ற மாநாடு எகிப்தில் ஷா்ம்-அல்-ஷேக் நகரில் சிறப்பு ஏற்பாடுகளுடன் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாடு, இந்த முறை நவம்பர் 6 முதல் நவ.8-ஆம் தேதி வரை எகிப்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உட்பட 120 உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பாக பிரதமர் மோடி பங்கேற்பது உறுதி செய்யப்படாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார்.
மேலும் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட “சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை” என்ற திட்டத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்போவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த மாநாட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.