கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை 13 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. எட்டு கால்நடைகள் இறந்துள்ளன. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்மழை பெய்து வருகிறது .கடந்த இரண்டு நாட்களாக மழை சிறிதளவு விட்ட நிலையில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மாவட்டத்தில் இதுவரை தொடர்மழை காரணமாக 13 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்துள்ளது எனவும் இதுபோன்று மின் கம்பங்கள் ஏழு இடங்களில் சாய்ந்துள்ளது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே சுவர் இடிந்து விழுந்ததிலும் ,வெள்ளப் பெருக்கு மற்றும் மின் தாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக 8 கால்நடைகள் பலியாகி உள்ளன. கடலூர் ஒன்றியம் ஞானமேடு பஞ்சாயத்தில் பிரபு என்பவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் மின்சார கம்பி அறுந்து விழுந்து வயலில் கிடந்த நிலையில் பசு மாடு அதில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது .பாதிப்புக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று காலை வரை மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அதிகபட்சமாக 53.2 மில்லி மீட்டரும், கொத்தவாச்சேரியில் 43 மில்லி மீட்டரும், கடலூரில் 37.2, முஷ்ணம் 34.3, சிதம்பரம் 23, அண்ணாமலை நகர் 16.2, விருதாச்சலம் 9 குறைந்தபட்சமாக தொழுதூரில் மூன்று மில்லி மீட்டர் என மாவட்ட முழுவதும் 398.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.