அகமதாபாத்: குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக்கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜ தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி பங்கேற்று கெஜ்ரிவால் பேசுகையில்:
பாஜ முதலில் டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவை குறிவைத்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் அவரை முதல்வராக்குவதாக ஆசை காட்டியது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, தற்போது பாஜ என்னிடமே பேரம் பேசியது. குஜராத் சட்டபேரவைத் தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி விலகி கொண்டால், அமைச்சர்கள் சிசோடியா, ஜெயின் ஆகியோர் ஒன்றிய விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அக்கட்சி தெரிவித்தது,’ என தெரிவித்தார்.
‘பாஜ.வில் இருந்து உங்களை யார் தொடர்பு கொண்டார்கள்?’ என்ற கேட்டபோது, ‘எனக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம்தான் இந்த தகவலை எனக்கு அளித்தது. பலர் மூலமாக சுற்றிவளைத்துத்தான் அக்கட்சி தனது செய்தியை உரியவரிடம் கொண்டு சேர்க்கும். அப்படித்தான் பாஜ.வின் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்டது,’ எவ பதிலளித்தார்.