புதுடெல்லி: குஜராத் தேர்தலில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க பாஜக.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய வேண்டும் என்ற பாஜக.வின் கோரிக்கையை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நிராகரித்துவிட்டார்.
இப்போது, குஜராத் பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஆம் ஆத்மி விலகினால், கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை விடுவிப்பதாக பாஜகவினர் என்னிடம் பேரம் பேசினர். இதுபோல மணிஷ் சிசோடியாவை கைது செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனர்” என்றார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஜாபர் இஸ்லாம் நேற்று கூறும்போது, “அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பது முற்றிலும் பொய். ஆதாரமற்ற புகார். பாஜக மீதான நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவும் மக்களை திசைதிருப்பவுமே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூகசேவகர் அன்னா ஹசாரேவின் பெயரைப் பயன்படுத்தி டெல்லியில் ஆட்சிக்கு வந்தார் கேஜ்ரிவால். எனவே, ஆட்சியைப் பிடிக்க யாரை வேண்டுமானாலும் அவர் திசை திருப்புவார்” என்று தெரிவித்தார்.