தொண்டாமுத்தூர்: விலை உயர்ந்த கார், குதிரை சாரட் வண்டி, பல்லக்கு, வளர்ப்பு யானை மீது மணமகன் செல்வது உள்பட பல்வேறு ஏற்பாடுகளை செய்து கெத்தாக பெண் வீட்டில் இறங்குபவர்கள் மத்தியில் கோவை வாலிபர் ஒருவர் 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து கேரள பெண்ணை திருமணம் செய்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா (28). இன்ஜினியர்.
இவர், குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும், ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனாவுக்கும் சிவசூர்யாவுக்கும் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் ஏற்பாடு செய்தனர்.
இதற்காக கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே சிவசூர்யா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 5.30மணிக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்களும் சென்றனர். பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு 150 கி.மீ. பயணம் ெசய்து மதியம் 2.45 மணிக்கு சென்றார். அதன்பின் நேற்று காலை 10 மணிக்கு குருவாயூர் கோயிலில் சிவசூர்யா-அஞ்சனா திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து சிவசூர்யா கூறுகையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பொது மக்கள் அக்கறை எடுத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1,902 கி.மீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டேன் என்றார்.