தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரதி அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் பரமசிவம், மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் மணி, அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக வழங்கவும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்யவும், ஈட்டிய விடுப்பு பலன் வழங்கவும், அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிடவும், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பாஸ்கர், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பழனி,அரசு பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் காதர்மொய்தீன், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத்தலைவர் உள்ளிடோர் கலந்து கொண்டு பேசினர்.
இதைத்தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தின் முடிவில் இணைச் செயலாளர் கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.