டிவிட்டரை நம்பி மோசம் போனதாக புலம்பல் இந்தியாவில் 90 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

புதுடெல்லி: டிவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது ஊழியர்களில் 90 சதவீதம் பேரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனத்தை நம்பி மோசம் போனதாக நீக்கப்பட்ட ஊழியர்கள் புலம்புகின்றனர். உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவீதம் பேரை நீக்கம் செய்தார். செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவரது இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றிய நிலையில், 160 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதற்குள் அவர்கள் வேறு வேலை தேடிக் கொண்டு போகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவன லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டுமென இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, பல ஊழியர்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என புலம்புகின்றனர். அவர்கள் வேலையில் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை என்கின்றனர். இதனால் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும், சில டஜன் பணியாளர்கள் மட்டுமே வேலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிவிட்டர் நிறுவனத்தை பொருத்தவரை எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம், நல்ல சுதந்திரம், நல்ல சம்பளம் போன்ற சலுகைகளை ஊழியர்கள் அனுபவித்து வந்தனர். இவையெல்லாம் ஒரே நாளில் இல்லை என்றதும் தற்போது விரக்தி அடைந்துள்ளனர். தற்போதுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மையில் இன்னும் 2 மாதத்தில் வேறு வேலையை தேடிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகவும் பலர் சமூக வலைதளங்களில் புலம்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.