தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னையா?- நெவர் என்கிறார் அமைச்சர்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

2030 க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் எட்ட செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார். கோவை மாநகரம் மிகச் சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்க ஒரு சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் இந்த வீண் முயற்சி தோற்றுப் போகும். கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் நியாயமான மின் கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கோவையில் தீபாவளி பண்டிகை தினத்துக்கு முன்தினம் அதிகாலை காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்தது. இச்சம்பவம் பயங்கரவாத தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற ரீதியில் தமிழக பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.