திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட 11 தாலுகா காவல் நிலையங்களில் தீவிர குற்றங்களுக்கு தனி விசாரணைப்பிரிவு துவக்கம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: கோவை மாநகர் மற்றும் 11 தாலுகா அலுவலகங்களில் கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களுக்கான தனி விசாரணைப்பிரிவு துவக்கிய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்தது. திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சதீஷ்குமார், சங்கர் மற்றும் மற்றொரு சதீஷ்குமார் ஆகியோருக்கு, கடந்த 2017ல் திருச்சி 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தனர். ஐகோர்ட் கிளை 3 பேரையும் விடுதலை செய்தது. மேலும், காவல் துறையில் கொலை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்த அறிக்கையை, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா ஆகியோர் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சிவகாஞ்சி, வேலூர் தெற்கு, கடலூர், கரூர், தஞ்சை, ஈரோடு, நாமக்கல், சூலக்கரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தாழையூத்து ஆகிய 11 தாலுகா காவல் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு மற்றும் கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களுக்கான விசாரணைப்பிரிவு என தனித்தனியாக  துவக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு, விசாரணையை மூத்த காவல் துறை அதிகாரியும் கண்காணிப்பார். இத்திட்டம் படிப்படியாக அனைத்து போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கும். இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதும் தீவிர குற்றங்களுக்கான விசாரணைப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்பிரிவினர் கொலை, ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி, மர்ம சாவு, திருட்டு, துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிபொருள் வெடிப்பு, ஆள் கடத்தல், சாதி, மத மோதல்கள், அதிக உயிரிழப்பைக் கொண்ட விபத்துகள் குறித்து விசாரிப்பர். நீதிமன்ற உத்தரவின்படி இவை உடனடியாக ஏற்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விசாரணைக்கான தொழில்நுட்பங்கள் குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் துரித நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும், முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் குற்ற வழக்கு விசாரணையின் தரத்தை மேம்படுத்துவதாகவே அமையும்.  அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கத் தகுந்த வழக்கு இது. மேலும் நடவடிக்கையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்தாண்டு பிப். 23க்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.