இஸ்லாமாபாத்: உலக நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தை சாத்தியப்படுத்தும் நோக்கில் சீனா சார்பில் பெல்ட் அண்ட்ரோடு இனிஷியேட்டிவ் என்ற பெயரில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் ரயில்வே, சாலை,துறைமுகம், சுரங்கம், எரிசக்தி உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பெரும்முதலீடு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்கள் (சிபிஇசி) 60 பில்லியன் டாலர் (ரூ.4.98 லட்சம் கோடி) மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் பணிபுரியும் சீன ஊழியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படுகிறது. சமீபத்திய தாக்குதலில் சீன ஊழியர்கள் சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிபிஇசி திட்டங்களில் பணிபுரியும் சீன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் குண்டு துளைக்காத கார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.