தாய்ப்பால் தானம் முக்கியமான விஷயமாக மாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் குழந்தைகளின் இறப்பு கணிசமாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 55,000 மில்லி லிட்டர் (55 லிட்டர்) தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

அவரின் இந்தப் பணியை, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. கோவை கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து மோனிகா. பொறியியல் பட்டதாரியான இவரின் சாதனைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து சிந்து மோனிகா நம்மிடம் கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவை தான். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணமாகிவிட்டது. குழந்தை பிறந்தவுடன், ஆரம்பத்தில் ஃபார்முலா மில்க் தான் உட்கொண்டது. பிறகு நான் பம்ப் மூலம் பால் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். தாய்ப்பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தபோது, என் கணவர் ஒத்துழைப்புக் கொடுத்தார்.

`அமிர்தம் தாய்ப்பால் குழு’ மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். என் குழந்தை பிறந்த 100 நாளில் இருந்து தானம் செய்கிறேன். தற்போது குழந்தைக்கு 19 மாதங்கள் ஆகிவிட்டன.
பலர் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்தாலும், அதற்கான பை கூட வாங்க முடியாத சூழலில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு தாய்ப்பால் தானம் செய்வதற்கான பேகை வாங்கித் தரலாம் என்றும் முடிவு செய்திருக்கிறேன். தாய்ப்பாலின் அருமை அது கிடைக்கப்பெறுபவர்களைவிட, கிடைக்கப்பெறாத குழந்தைகளின் அம்மாக்களுக்குத்தான் தெரியும். தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறப்பு கூட நடக்கிறது. தாய்ப்பால் தானம் மூலம் அவற்றை தடுக்க முடியும்.

சில நேரங்களில் மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கு நாம் தானமாக கொடுக்கும் தாய்ப்பாலை கொடுத்தவுடன், நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து உடனடியாக குணமடைந்து வீடு திரும்பியதை பார்த்திருக்கிறோம். இரண்டாவது குழந்தை பிறந்தாலும், என்னால் முடிந்தவரை தாய்ப்பால் தானம் செய்வேன்” என்றார்.