"கவுன்சிலர்களை கேஸ் பயம் காட்டி திமுக-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க" – பொங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அதோடு, அ.தி.மு.கவைச் சேர்ந்த ஆறு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களையும் அழைத்து வந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

“கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு, அ.தி.மு.கவைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களையும், தி.மு.கவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவர்களை மிரட்டியும், பொய் கேஸ் பயம் காட்டியும் தி.மு.கவில் இணைத்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் ஐந்து முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நடைபெற உள்ள துணைத் தலைவர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில், கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது வழக்கு தொடர்வது, மிரட்டுவது போன்ற செயல்களில் தி.மு.கவினர் ஈடுபட்டு வருகிறார்கள். பழைய கேஸில், முடிந்துபோன கேஸில் போலீஸார் அ.தி.மு.கவைச் சேர்ந்தவருக்கு சம்மன் கொடுத்தாங்க. அந்த சம்மன்ல அதிகாரி கையெழுத்துப் போட்ட தேதி 6. ஆனால், போலீஸ் சம்மன் கொடுக்க வந்தது இன்னைக்கு 9 மணிக்கு. விசாரணை பத்து மணிக்கு. அதேபோல், அ.தி.மு.கவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை கடத்தி வைத்திருப்பதாக சிலர் புகார் அளித்துள்ளனர். அவர்களை யாரும் கடத்தவில்லை.

அவர்களை நேரில் அழைத்து வந்து விளக்கம் தெரிவிப்பதற்காகவும், அவர்களை மாவட்ட ஆட்சியர், எஸ்.பியிடம் நேரில் காட்டி, அதுசம்பந்தமாக மனு அளிக்கவும் வந்துள்ளேன். அவர்களை கடத்தி வைத்திருப்பதாக கூறி எனது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அதை வைத்து என்னைக் கைது செய்ய வைக்கவும் தி.மு.கவினர் திட்டமிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். தேர்தலில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள். எனவே, அ.தி.மு.கவைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாவட்டக் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அ.தி.மு.கவுக்கு ஆறு, தி.மு.கவுக்கு ஆறு சமமா இருக்கு. இரண்டு கட்சிகளுக்கும் உறுபினர்கள் எண்ணிக்கை சமமா இருப்பதால், குலுக்கல் முறையில் தேர்தல் முடிவை அறிவிக்க வைக்கட்டும்.

காவல்துறையில் மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.கவுக்கு வந்தாலும் சரி, தி.மு.கவுக்கு வந்தாலு சரிதான். ஆனால், சர்வாதிகார முறையில் ஒவ்வொருவரையும் மிரட்டி தி.மு.கவுக்கு கொண்டுப்போக பார்க்குறாங்க. இதுவரை, அ.தி.மு.கவுல ஒன்றியச் சேர்மன்கள் இருந்தாங்க. இப்போ அதுல நாலு பேர் இல்லை. எல்லாத்தையும் மிரட்டி தி.மு.கவுக்கு கொண்டுபோய்கிட்டு இருக்காங்க. தோகைமலை யூனியல்ல அவங்க மிரட்டியதுல 8 கவுன்சிலர்கள் தி.மு.கவுக்கு போயிட்டாங்க. இப்ப நாலு பேர்தான் அ.தி.மு.கவுல இருக்காங்க. கரூர்ல தி.மு.க அராஜகம் நடந்துகிட்டு இருக்கு. அதிகாரம் இருக்குங்கிற போதையில அளவுக்கு மேல ஆடிக்கிட்டு இருக்காங்க. இது நிரந்தரம்னு நினைச்சு ஆடிக்கிட்டு இருக்காங்க. இது நிரந்தரம் இல்லை. அரசியல்ல ஏற்றத்தாழ்வு வரும். இதெல்லாம் தெரியாமல் ஒருசிலர் நடந்துகிட்டு இருக்காங்க. இதுக்கு மேலயும் தேர்தல் நியாயமா நடக்கலன்னா, நாங்க சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.