புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரில் சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டார் என்று பாஜ குற்றம்சாட்டியது. இதில் ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளது. எனவே, பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பாஜ கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து சட்டவிரோத சுரங்க குத்தகை ஒதுக்கீடு தொடர்பாக, சோரனின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்யலாம் என தேர்தல் ஆணையம், ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாக சொல்லப்படுகிறது. இதை ஆளுநரோ, தேர்தல் ஆணையமோ உறுதிப்படுத்தவில்லை.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு உகந்தது என்று கடந்த ஜூனில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சோரன் மேல்முறையீடு செய்தார். மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு, ‘‘சுரங்க குத்தகை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம்’’ என தெரிவித்தனர். இதன் மூலம் ‘வாய்மையே வெல்லும்’ என டிவிட்டரில் பதிவிட்ட ஹேமந்த் சோரன், ‘‘நாட்டின் நீதித்துறை மீதும், சட்டத்தின் ஆட்சியிலும் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.