பயணியர் நிழற்குடை பள்ளத்தில் விழுந்த 11 வயது மாணவன் பலி..! தடுப்பு இருந்தால் தப்பித்திருப்பான்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கிய நிலையில் அதில் தவறி விழுந்த  பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி – விஜயகுமாரி தம்பதியரின் 11 வயது மகன் வினோத் என்பவர்தான் உயிரிழந்த 5 ஆம் வகுப்பு மாணவர்..!

விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையை, சென்னை கன்னியாகுமரி விரைவு சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்காக விஜயமாநகரம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டி இருந்தனர்.

நீண்ட நாட்களாக அந்த பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடந்தது. அப்பகுதியில் கன மழை பெய்ததால் பயணியர் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

அப்பகுதி வழியாக வீட்டிற்குச் சென்ற சிறுவன் வினோத் அந்த பள்ளத்தில் தவறி விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அந்த பள்ளத்தில் இருந்து சிறுவனின் உடலை மீட்ட நிலையில் தங்கள் குழந்தை உயிரிழந்து கிடப்பதை பார்த்து தாங்க இயலாமல் பெற்றோர் கதறி அழுதனர்.

மங்கலம்பேட்டை போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பயணியர் நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும், பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதும், அதனை சுற்றி தடுப்புகள் அமைக்காததுமே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் எனகுற்றஞ்சாட்டிய சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மங்கலம்பேட்டை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு மங்கலம்பேட்டை போலீசார் சிறுவனின் உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பொறுப்பற்ற ஒப்பந்ததாரர்களாலும், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட மரணக்குழி ஒரு உயிரை காவௌ வாங்கி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.