அரசியலில் ஜி.பி.முத்து… எலே செம சென்டிமென்ட்லே… மாஸ் பிளானை இறக்கும் ர.ர.,க்கள்!

இணையவாசிகள் அனைவருக்கும் ஜி.பி.முத்துவை தெரியாமல் இருக்காது. டிக்டாக் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் தமிழ் சீசன் 6க்கு வருகை புரிந்து வேற லெவலுக்கு புகழ்பெற்று விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஒருவழியாக நடப்பு சீசனில் பங்கேற்று அசத்தினார். இவருக்காக மீம்ஸ்கள் தெறிக்க, டிவி முன்பு குடும்பம், குடும்பமாய் ரசிகர்கள் குவிய தினசரி திருவிழா கோலமானது.

ஆனால் தனது வீட்டு நியாபகம், மகனை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளிட்ட காரணங்களால் சில வாரங்களில் தாமாக வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ”என்னது ஆதாமா?” என்று நடிகர் கமல் ஹாசனிடம் கேட்டது ட்ரேட் மார்க் ஆகிப் போனது. மீம்ஸ்களில் தவறாமல் பயன்படுத்தும் வாசகமாகி விட்டது. பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தால் திரைத்துறையிலும் வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன.

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் யூ-டியூப் சேனல்களுக்கு பேட்டி மேல் பேட்டியாக கொடுத்து அவரது ரசிகர்களை தொடர்ந்து குதூகலமாக்கி வருகிறார். இந்நிலையில் அரசியல் குறித்து ஜி.பி.முத்து பேசியது இணையத்தில் தீப்பற்ற வைத்துள்ளது. அப்படியென்ன பேசியிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? ”எனது தந்தை, தாத்தா என அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

அந்த வழியில் வந்த எனக்கு ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். அதிமுக கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு எனக்கு பிடித்தமான நபர். அவர் ஒரு இரும்பு பெண்மணி. எப்போதும், யாருக்கும் அவர் பயந்தது இல்லை. பெண்ணாக இருந்து துணிந்து செயல்பட்டதை யாரும் பாராட்டவே நினைப்பார்கள். அவர் மரணமடைந்த போது ஒருநாள் முழுவதும் நான் அழுதேன். அன்று சாப்பிடவே இல்லை” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை அப்படியே கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதைக் கண்ட அதிமுக தொண்டர்களும், ஐடி நிர்வாகிகளும் விஷயத்தை கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வீடியோவை தங்கள் பங்கிற்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக உட்கட்சி பூசலில் தவித்து வரும் சூழலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுக்குழுவின் ஆதரவோடு தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துக் கொண்டார். இதற்கு தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையில் 2024 மக்களவை தேர்தலுக்கான பணிகளுக்கு அச்சாரம் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார். இத்தகைய சூழலில் ஜி.பி.முத்துவை அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கினால் என்னவென்று கட்சிக்குள் சிலர் கேட்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.