தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்ட பூபதி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:-
“தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. தற்போது, இந்த தொலைக்காட்சியை மேலும், மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், இதற்கான உபகரணங்களை வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆனால், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரியை நியமிக்காமல், உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடுவது தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதால், தற்போதைய டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து, உரிய அதிகாரிகளை நியமித்து, அதன் பின்னர் முறையாக டெண்டர் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயணபிரசாத் உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், நீதிபதிகள் தெரிவித்ததாவது,
“கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் டெண்டர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.