சேலம்: சேலம் மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தனிக்குழுவினர், தொட்டில்பட்டி, நங்கவல்லி கூட்டு குடிநீர் திட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்ற குற்றச்சாட்டை மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். வார்டு பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், மேட்டூர் அணையில் 120 அடி தண்ணர் ததும்பி நிற்கும் போதே, சேலம் மாநகர மக்கள் குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, ‘சேலம் மாநகராட்சிக்கு என நங்கவல்லி, தொட்டில்பட்டி தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் அளவுக்கு திட்டம் உள்ளது. இந்த சூழலில் புதியதாக நங்கவல்லி, மேட்டூர், தொட்டில்பட்டி தனி குடிநீர் திட்டம் ரூ.693 கோடியில் செயல்படுத்துவது தேவையில்லாதது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என்றுகூறி அவர் தலைமையில் மேயர் ராமச்சந்திரன் நாற்காலி முன்பு அமர்ந்து அதிமுக-வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மேயர் ராமச்சந்திரன், ஆணையர் கிறிஸ்துராஜ் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சூரமங்கலம் மண்டல குழுத் தலைவர் கலையமுதன் தலைமையில் தனிக்குழு அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிக்குழுவில் இடம் பெற்றுள்ள மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன், நிலைக்குழு தலைவர் (கணக்கு) மஞ்சுளா, அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் உள்பட குழுவில் இடம் பெற்றிருந்த கவுன்சிலர்கள், தொட்டில்பட்டி, நங்கவல்லி தனி குடிநீர் திட்டம் செயல்படும் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
தனி குடிநீர் திட்டத்துக்காக நாள்தோறும் 135 எம்எல்டி குடிநீர் மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை பம்ப்பிங் செய்யும் பகுதிகளில் தேவையான இயந்திரங்கள் உள்ளனவா, கூடுதலாக பம்ப்பிங் ஸ்டேஷன் தேவையா, நான்கு மண்டலங்களுக்கு சீராக குடிநீரை பிரித்துக் கொடுக்க தேவையான கூறுகள் குறித்தும், கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வேண்டுமா என ஆய்வில் ஈடுபட்டனர். தனிக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், குடிநீர் பிரச்சினையில் உள்ள குறைபாடுகள் களைந்து, விரைவில் மாநகராட்சி பகுதிகளில் இரண்டு நாட்களக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து தனிக்குழுவில் இடம் பெற்று சூரமங்கலம் உதவி பொறியாளர் முருகன் கூறும் போது, ‘மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் சரிசமமான முறையில் சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டி, தனிக்குழுவினர் தொட்டில்பட்டி, நங்கவல்லியில் ஆய்வு செய்தனர். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணவும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கிட தேவையான வசதிகள், வாய்ப்புகள், பராமரிப்பு பணி மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றி விளக்கமாக கேட்டறிந்தனர். தனிக்குழு ஆய்வறிக்கை தயாரித்து, மேயர், ஆணையரிடம் வழங்கிய பின்னர், மேல்நடவடிக்கை மேற்கொண்டு, மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’ என்றார்.