மோரோகோரோ: தான்சானியாவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு எலிகளை பயன்படுத்தும் நோக்கில், அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது பெல்ஜியத்தை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் ஒன்று. இந்தப் பயிற்சி அந்த நாட்டில் உள்ள மோரோகோரோ பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படத்தில் எலியின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் விதமாக சில காட்சிகள் இருக்கும். அது கற்பனைதான். அத்தகைய சில ஃபேன்டசி திரைப்படங்களில் வருவதை போல தான்சானியாவில் எலிகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எலியின் முதுகில் ஹை-டெக் பை ஒன்று காட்டப்படுகிறது. அதில் இருப்பிடத்தை அறிந்துகொள்ள உதவும் சாதனம், வீடியோ கேமரா மற்றும் இரு தரப்பு ரேடியோ தொடர்பு சாதானமும் இருக்குமாம். இந்த ரேடியோ சாதனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பேச முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை ஏபிஒபிஒ எனும் நிறுவனம் வழங்கி வருகிறது.
நாய்களை போல எலிகளுக்கும் பயிற்சி கொடுக்கலாம் என பயிற்சியாளர்கள் சொல்கின்றனர். எலிகளுக்கு உள்ள நுகரும் திறன் இதற்கு பெரிதும் உதவும் என நம்புகின்றனர். தற்போது ஆப்பிரிக்க ஜெயண்ட் பவுன்ச் எலிகளை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாழ்நாள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.