லண்டன், :இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, பிரிட்டனின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.
இதற்கிடையே ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நாடு கடத்த அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து நிரவ் மோடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
‘இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மனநிலை பாதிக்கப்படுவார்; தற்கொலை செய்து கொள்வார் என்று கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது’ என, உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் நிரவ் மோடியால் வழக்கு தொடர முடியும். அதே நேரத்தில், பொது நோக்கம் உள்ளது என உயர் நீதிமன்றம் சான்றளிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பு பறிபோனாலும், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வாய்ப்பு நிரவ் மோடிக்கு உள்ளது.
இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து, அவர் நாடு கடத்தப்படுவதற்கு மேலும் சில ஆண்டுகளாகும் என தெரிகிறது.
இதற்கிடையே, கடந்த ௨௦௧௯ மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, லண்டனில் உள்ள சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்