தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு என்று இருந்த ஒரு எதிர்பார்ப்பு ‘பிரின்ஸ்‘ படத்தின் மூலம் ஏமாற்றமாகியுள்ளது. ‘பிரின்ஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே தான் கிடைத்துள்ளது, ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்ப்பார்த்து கொண்டிருந்த இந்த படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. இந்த படத்தை அனுதீப்.கே.வி இயக்கியிருந்தார், மேலும் இப்படத்தை சுனில் நாரங், சுரேஷ் பாபு மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் தயாரித்திருந்தனர்.
‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயல்நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி மற்றும் அந்தராஜ் போன்ற நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார், பாண்டிசேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான இவர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மரியாவை காதலிக்கிறார், இருவரும் காதலிக்க தொடங்கி இறுதியில் ஒன்னு சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் முழு கதை. காதல் கலந்த நகைச்சுவை படமான இது பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியடைந்தது. மேலும் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், படு தோல்வியடைந்தாலும் அதற்கு நடிகர்கள் காரணமில்லை இயக்குனர்கள் தான் காரணம். அவர்கள் மக்களிடம் கதையை கொண்டு சென்ற விதம் காரணம், மேலும் திரைக்கதை எழுதுபவர் மற்றும் தயாரிப்பாளரும் படத்தின் வெற்றி தோல்விக்கு காரணமானவர்கள் தான். கதை எழுதுபவர் திறம்பட அதனை எழுத வேண்டும், இயக்குனர் அதை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், படமும் வெற்றி பெறுவதில் இவர்கள் இருவருக்கும் தான் முக்கிய பங்கு உள்ளது. தம்பி சிவகார்த்திகேயன் நடித்திருந்த ‘டான்’ மற்றும் ‘டாக்டர்’ படம் நல்ல வெற்றியை பெற்றது, ஆனால் ‘பிரின்ஸ்’ படம் தோல்வியடைந்ததற்கு இயக்குனர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.