பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை(ஆர்எல்வி) ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை(ஆர்எல்வி) விண்ணில் ஏவி, அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்டது. இந்நிலையில் ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் பரிசோதனையின் போது ஆர்எல்வி விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, ஓடுதளத்திலிருந்து 3 அல்லது 5 கி.மீ. தூரத்தில் இருந்து விடுவிக்கப்படும். அதன்பின் ஆர்எல்வி விண்கலம் விமானம் போல் பறந்து வந்து , விமான தளத்தின் ஓடு பாதையில் சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும். இது போன்ற பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ‘‘பருவநிலை தற்போது நன்றாக இல்லை. சாதகமான சூழ்நிலை நிலவும்போது, ஆர்எல்வி விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.