Northeast Monsoon Preparedness: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 09 – 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும், என்பதால், இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, எந்நேரமும் அனைத்துத்துறை அதிகாரிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், புயல், மழை ஏற்படும் நேரங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத்துறை அதிகாரிகளும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் பருவ மழை தீவிரமடையும் போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிவாரண முகங்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கட்டுப்பாட்டு அறைக்கு உதவிகள் கேட்டு பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் அழைப்புகளின்படி அதிகாரிகள் அங்கு சென்று பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதிப்பினால், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.