புதுடில்லி: அசாம், மேகலயா உட்பட 4 வடகிழக்கு மாநிலங்களின் சாலை திட்ட பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
இது தொடர்பாக, அசாமில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியவதாவது: 2024ம் ஆண்டுக்குள் வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த சாலை போக்குவரத்து நிலைமைகளை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
இந்த பகுதியில் சர்வதேச தரத்திலான சாலைகளை அமைப்பது என்ற இலக்குகளை கொண்டுள்ளோம். இதன்படி, இந்த மண்டலங்களில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மறுஆய்வு செய்து, அதனை தொடர்ந்து புதிய சாலை திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
அதாவது அசாமுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், மேகாலயாவுக்கு ரூ.9ஆயிரம் கோடியும், நாகலாந்துக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், சிக்கிமுக்கு ரூ.4 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்குவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

அசாமில், 700 கி.மீ., சாலை நெட்வொர்க்கை உருவாக்குவோம். அவற்றில் ரூ.14,000 கோடி மதிப்பிலான 20 திட்டங்கள் ஏலத்தில் உள்ளன. கவுகாத்தி ரிங்ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரம்மபுத்திராவில், பெரிய பாலத்தை ரூ.1,800 கோடியில் கட்டுவோம்.
அசாம் மற்றும் பிற அண்டை மாநிலங்களில் பல இடங்களில் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் தற்போதைய சாலைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement