அண்ணாமலைக்கு இது தெரியாதா? விமானநிலையத்தில் பாடம் எடுத்த அமைச்சர்!

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதை பின்பற்றுவதாக கூறும் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் அமைத்துள்ள மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழு குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11 ஆம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அப்போது ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை இன்று மேற்கொள்கின்றனர். மாணவர்களோடு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் செல்கிறார்.

சார்ஜா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன். தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். EWS இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் இருப்பார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.